இலங்கைக்கு கடல் வழியாக கடத்த இருந்த 3 கோடி மதிப்பிலானவலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நேற்று (25) மாலை படகில் கடத்த வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர் தப்பி ஓடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சமீப காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, சீனியப்பா தர்கா, களிமண் குண்டு, திருப்புல்லாணி, பாம்பன் குந்துகால் உள்ளிட்ட கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், உரம், அழகு சாதன பொருட்கள், சமையல் மஞ்சள் மூட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
வலி நிவாரணி மாத்திரை அட்டைகள்
இந்தநிலையில் மண்டபம் அடுத்த சீனியப்பன் தர்ஹா கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹோவர்கிராப்ட் ரோந்து கப்பலில் மண்டபம், வேதாளை, சீனியப்பன் தர்ஹா கடற்கரை ஓரங்களில் சுற்றிவளைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வாகனத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் படகில் பெட்டிகள் ஏற்றுவதை கண்ட இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது படகில் இருந்த இருவர் படகுடன் கடலில் தப்பித்த நிலையில் சரக்கு வாகனத்தில் இருந்தவர்கள் பெட்டிகளை கடற்கரையில் வீசிவிட்டு வாகனத்துடன் தப்பி ஓடினர்.

இதையடுத்து கடற்கரை ஓரம் கிடந்த 12 பெட்டிகளை எடுத்து வந்து மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு எடுத்து வந்த கடலோர காவல் படை வீரர்கள் பெட்டியை சோதனை செய்தபோது அதில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
இந்த வகையான வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கையில் கொக்கின், ஹெராயின், மெத்தப்பட்டமன் போன்ற போதைப் பொருளுடன் கலந்து பயன்படுத்தப்படுவதால் இவ்வகையான வலி நிவாரணி மாத்திரைகள் அதிக அளவில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதால் வலி நிவாரணி மாத்திரைகள் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்த இந்திய கடலோர காவல் படையினர் தப்பி ஓடிய மர்ம நபர்கள் மற்றும் சரக்கு வாகனம் குறித்து மண்டபம் மரைன் பொலிசாரிடம் தகவல் அளித்துள்ளனர்.
மண்டபம் அடுத்த சீனியப்பா தர்ஹா கடற்கரையில் இலங்கை கடத்துவதற்காக சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் பிடிபட்டது கடலோர கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.