இலங்கை கடற்றொழிலாளரின் உயிரை காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை
உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசரநிலையை எதிர்கொண்ட இலங்கை கடற்றொழிலாளர் ஒருவரை இந்திய கடலோர காவல்படை, நடுக்கடலில் இருந்து காப்பாற்றி மருத்துவ வசதிகளை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று (05.04.2024) இடம்பெற்றுள்ளது.
இலங்கை கடற்றொழில் படகான 'கல்பேனி' கடலுக்குள் தொழிலுக்காக சென்ற நிலையில், அதன் இயந்திரம் என்ஜின் பழுதானதால் தத்தளித்துள்ளது.
மீட்பு நடவடிக்கை
சென்னையில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் படகு சென்றபோது, 44 வயதான கடற்றொழிலாளர் ஒருவருக்கு நேற்று(05) திடீரென மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து 44 வயதான சுமித் லலித என்ற இந்த இலங்கை கடற்றொழிலாளர் இந்திய கடலோர காவல்படையால் மீட்கப்பட்டு அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உலங்கு வானூர்தியின் மூலம் அவர் சிகிச்சைக்காக சென்னைக்கும் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
மேலும் அவர் மேலதிக சிகிச்சைக்காக சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |