மறக்க முடியாத அனுபவம்: யாழ். இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய பிரபலங்கள் வெளியிட்ட கருத்து
யாழ்ப்பாணத்தில் இந்திய பிரபலங்களான இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன், நடிகர் சித்தார்த் ஆகியோரின் பங்கேற்புடன் "யாழ் கானம்" இசை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
குறித்த இசை நிகழ்ச்சியானது நேற்று (22.10.2023) யாழ்பாணத்தில் நடைபெற்றது.
இசை நிகழ்ச்சி முடித்து சென்னை திரும்பும் முன் இந்திய சினிமா பிரபலங்கள் இருவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
சந்தோஸ் நாராயணனின் கருத்து
இதன் போது கருத்து தெரிவித்த சந்தோஸ் நாராயணன்,தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் "யாழ் கானம்" நிகழ்ச்சி இடம்பெற வேண்டும் என்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றேன் என இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் கானம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக முற்றவெளியில் நடந்திருக்கின்றது, யாழ்ப்பாண மக்கள் எமக்கு நிறையவே ஆதரவை தந்தார்கள்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களுக்கும், போரின் போது இறந்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி இருந்தோம், நிகழ்வுக்கு மக்களுடைய ஆதரவு நிறையவே கிடைத்திருந்தது.
ஒவ்வொரு வருடமும் இந்த யாழ் கானம் இடம்பெற வேண்டும் என்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றேன் எமக்கு ஆதரவ வழங்கிய ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்”என தெரிவித்துள்ளார்.
மறக்கவே முடியாத அனுபவம்
சந்தோஸ் நாராயணனோடு மீண்டு யாழ்ப்பாணம் வருவேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ் கானம்" இசை நிகழ்ச்சியை முடித்து மீண்டும் சென்னையை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இந்த நிகழ்வு மறக்கவே முடியாத ஒரு அனுபவம், நான் யாழ்ப்பாணம் வருவது இதுவே முதல்முறை, மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக இந்த யாழ் கானத்தை நான் பார்க்கின்றேன்.
உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பாடகர்கள் கலந்து கொண்டு பாடி இருக்கின்றார்கள். எதிர்காலத்திலும் யாழ்ப்பாண மக்களுக்கு இவ்வாறான நிகழ்ச்சிகள் வரும் என்பதை நான் எதிர்பார்க்கின்றேன்.
மீண்டும் அடுத்த முறை சந்திக்கும் வரை தமிழ் சினிமாவை, தமிழ் பாடல்களை எப்போதும் நேசித்துக் கொண்டே இருங்கள். ஏனென்றால் அதுவே எமக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கும். உங்களுக்காக உலகம் காத்திருக்காது, உங்களுக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து அதில் உழையுங்கள் என தெரிவித்துள்ளார்.