எல்லை தாண்டும் இந்திய படகுகள் அரசுடமை ஆக்கப்படும் : டக்ளஸ் தேவானந்தா (Photos)
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழ். மயிலிட்டித்துறைமுகதிற்கு இன்று விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தடுத்து வைக்கப்படடுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை பார்வையிட்ட பின்னர் பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைமுக நிர்வாகத்தினருடனாக கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு மயிலிட்டித்துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
அரசுடமையாக்கப்படுகின்ற படகுகளை பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளித்து, ஆழ்கடல் மீன்பிடி போன்ற சட்ட ரீதியான தொழில்களில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்படும்.
அவ்வாறு பயன்படுத்த முடியாத படகுகளை விற்பனை செய்து இந்தியக் கடற்றொழில் படகுகளினால் பாதிக்கப்பட்டவர்களுகு நஷ்ட ஈடு வழங்கப்படும்.
இதனை தொடர்ந்து மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,
மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாவது கட்டப் புனரமைப்பு தவறான நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்டமையினால் சரியான முறையில் திட்டமிடப்படவில்லை.
இதன் காரணமாக இந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இந்தத் துறைமுகத்தினால் பூரணமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், பிரதேச மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.