லண்டனில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்
இந்திய வம்சாவளியினரான மலேசிய கோடீஸ்வரர் ஒருவர் லண்டனில் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Petra Group என்னும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான வினோத் சேகர் என்பவர், கடந்த வாரம் லண்டனில் வாழும் தன் மகளான தாராவின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், லண்டனில் சேகர் காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து வெளியேறவும், திடீரென அங்கு இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளார்கள்.
மர்ம நபர்கள்..
அதன்போது, சரமாரியாக சேகரைத் தாக்கிய குறித்த நபர்கள், அவர் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைப் பறித்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து, தன் கணவர் தாக்கப்படுவதைக் கண்ட சேகரின் மனைவி, உடனடியாக காரிலிருந்து இறங்கி சத்தமிட்டவாறே தனது கைப்பையால் தாக்குதல்தாரிகளைத் தாக்கியுள்ளார்.
அவரது தாக்குதலை எதிர்பாராத அந்த நபர்கள் இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர், இந்த சம்பவம் குறித்து பொலிஸில் முறையிடப்பட்டுள்ள நிலையில், தன் மீதான தாக்குதல் குறித்தும், லண்டன் தெருக்களின் அபாயம் குறித்தும் தான் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில் கோடீஸ்வரர் சேகர் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



