இலங்கையின் செயல்பாடு! ஐ.நாவில் கவலை வெளியிட்ட இந்தியா
இலங்கையின் சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்காதது சம்பந்தமாக இந்தியா தனது கவலையை வெளிப்படுத்துவதாக ஜெனிவாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார்.
சுவிஸர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று(12.09.2022) ஆரம்பமான மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை சம்பந்தமான அறிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அது தொடர்பாக கருத்து வெளியிடும் போதே பாண்டடே இதனை கூறியுள்ளார்.
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர வேண்டும்
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர வேண்டும் என்பதுடன் மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும்.
அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் மட்டுமே இலங்கைக்குள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.
நீதி, அமைதி, சமவுரிமை மற்றும் இலங்கை தமிழ் சமூகத்திற்கு கௌரவம் ஏற்படும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதனை செய்ய வேண்டும் எனவும் பாண்டே கூறியுள்ளார்.
புதிய சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாத தடைச் சட்டத்தை இடைநிறுத்த வேண்டும்
இதனிடையே சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு அமைவான புதிய சட்டத்தை உருவாக்கும் வரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள தெரியவருகிறது.