T20 - இந்தியா vs பாகிஸ்தான் போட்டி! பரபரப்பாகும் கொழும்பு : உச்சம்தொட்ட சொகுசு ஹோட்டல் அறைகளின் விலை
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி, காரணமாக கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல்களில் அறைகளின் விலைகள் வழக்கமான விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி, கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வரும் 15 ஆம் திகதி நடைபெற உள்ளது.
ஹோட்டல்களில் அறைகளின் விலைகள் அதிகரிப்பு
இந்த போட்டி 100,000 க்கும் மேற்பட்ட இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்," என்றும் கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த மைதானம் சுமார் 35,000 பார்வையாளர்களை மட்டுமே தங்க வைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல்களில் அறைகளின் விலைகள் வழக்கமான விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இரசிகர்கள் கடைசி நிமிட பயண ஏற்பாடுகள்
இலங்கை ஹோட்டல்கள் சங்கத்தின் (THASL) முன்னாள் தலைவர் எம். சாந்திகுமார் கூறுகையில்,
இந்த காலகட்டத்தில் சராசரியாக 55%பதிவுகளை கொண்ட நகர ஹோட்டல்கள், தற்போது கிட்டத்தட்ட 90% பதிவுகளை கொண்டுள்ளன, பல முன்னணி ஹோட்டல்களின் அறைகள் ஏற்கனவே முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டன."அதிக தேவை காரணமாக சுமார் 40 முதல் 50% வரை விலை அதிகரிப்பையும் நாங்கள் கவனிக்கிறோம்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் பரபரப்பான இந்தியா vs பாகிஸ்தான் மோதல் காரணமாக, ஆயிரக்கணக்கான இரசிகர்கள் கடைசி நிமிடத்தில் பயண ஏற்பாடுகளை பெற விரைந்து வருவதால், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கொழும்புக்கான விமானக் கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன.
உச்சக்கட்ட பாதுகாப்பு
இதேவேளை, இப்போட்டியைப் பார்வையிட பெருமளவான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதனைக் கருத்தில் கொண்டு உச்சக்கட்ட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்கமைய, பார்வையாளர்கள் விளையாட்டரங்கிற்குள் பெரிய அளவிலான பயணப் பொதிகள், கண்ணாடிப் போத்தல்கள், ட்ரோன் (Drone) கருவிகள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை எடுத்து வருவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகச் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண மைதானத்திற்கு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு விரைவாக மைதானத்திற்கு வருகைத் தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளனர்.
இந்த போட்டி மாலை 07 மணிக்கு குறித்த கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகும் நிலையில், மைதானத்திற்கான உள் நுழைவு மாலை 03 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.