இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிமாருக்கு விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்
2024-25 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர்களில் அடைந்த மோசமான நிலையை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, சில கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுவரை, வீரர்களின் குடும்பங்கள், குறிப்பாக வீரர்கள் மனைவிகள் நீண்ட சுற்றுப்பயணங்களில், வீரர்களுடன் தங்குவதற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டாலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இப்போது சில கடுமையான மாற்றங்களைச் செய்ய உள்ளது.
அறிக்கை ஒன்றின்படி, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் வீரர்கள் நீண்ட காலம் தங்கள் குடும்பத்தினருடன் தங்கினால் அவர்களின் செயல்திறன் பாதிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கருதுகிறது.
[
தங்கும் காலம்
எனவே, 2019க்கு முன்பு இருந்த ஒரு விதியை மீண்டும் அறிமுகப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விரும்புகிறது. இந்த விதி வீரர்களுடன் அவர்களின் குடும்பங்கள் தங்கியிருக்கும் நேரத்தை கட்டுப்படுத்துகிறது.
குறிப்பாக 45 நாள் சுற்றுப்பயணத்தின் போது குடும்பங்கள், குறிப்பாக வீரர்களின் மனைவிகள், வீரர்களுடன் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அனுமதிக்கும்.
அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு வீரரும் அணியின் மற்ற உறுப்பினர்களுடன் அணிக்கான பேருந்தில் பயணிக்க வேண்டியிருக்கும். தனிமையான பயணத்தையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஊக்கப்படுத்தாது.
இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே மற்றும் கே.எல் ராகுலின் மனைவி அதியா செட்டி, விராட் கோலியின் மனைவி அனுஸ்கா சர்மா, போன்றோர், இனி தங்கள் கணவர்களுடன் முழு சுற்றுப்பயணங்களுக்கும் செல்ல முடியாமல் போகலாம்.
இந்தநிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அவரது மேலாளர் கௌரவ் அரோரா ஆகியோருக்கும் எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
ஏனைய கட்டுபாடுகள்
இதன்படி, கம்பீரின் மேலாளர் அணியின் ஹோட்டலில் தங்க அனுமதிக்கப்படமாட்டார், அல்லது மைதானங்களில் உள்ள முக்கியஸ்தர்களின் இருக்கைகளில் அமர அனுமதிக்கப்படமாட்டார். அத்துடன் அவர் கம்பீருடன் அணி பேருந்திலோ அல்லது அதன் பின்னால் உள்ள பேருந்திலோ செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.
இதற்கிடையில் விமானப் பயணத்தின் போது, வீரர்களின் பொருட்களுக்கான எடை 150 கிலோவைத் தாண்டினால், அதற்கான பணத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செலுத்தாது. அந்த செலவை வீரர்கள் தாங்களாகவே ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவர் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளர் மற்றும் பொருளாளர் உட்பட உயர் அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர்.
இதன்போது புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விராட் கோலி, ரோஹித் உள்ளிட்ட மூத்த வீரர்களின் எதிர்காலம், கம்பீரின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் ஆகியவை இந்தக் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்ட முக்கிய விடயங்களில் அடங்கும்.
இது இவ்வாறிருக்க அணியில் துணை ஊழியர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சில துணை ஊழியர்கள் நீண்ட காலமாக அணியுடன் இருப்பதால், செயல்திறன் சீராக இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.