கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் தொடர்பாக அமைச்சர் ஆய்வு!
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
பூநகரி பிரதேச சபையின் கீழ் உள்ள பேருந்து நிலையம் கட்டப்பட்டு அவற்றை மக்கள் பாவனைக்காக பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்ட போது குறித்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாமையால் வர்த்தகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று நேரில் சென்று பார்வையிட்டு இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய முடியும் என பிரதேச சபையின் தவிசாளரிடம் உறுதியளித்துள்ளார்.
இதே போன்று கடற்றொழில் ஈடுபடுபவர்களின் குறை நிறைகளையும் கெளதாரி முனை சென்று கடற்தொழிலாளர்களுடன் இந்தியா கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் எதுவும் இருக்கிறதா என்றும் கடற்றொழில் ஈடுபடுபவர்களின் குறை நிறைகளையும் கேட்டாரிந்து கொண்டார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும், வருகின்ற கச்சதீவு திருவிழா தொடர்பாக ஊடகவியலாளர் வினவிய போது கடந்த வருடம் போன்று இந்த வருடமும் கோவிட் காரணமாக பூசகர்கள் மாத்திரம் சென்று பூஜை வழிபாடு செய்ய வேண்டிய நிலை வரும் போல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றவர்களில் ஒரு பகுதியினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீன்பிடிக் குல்லாக்கள் இன்று (15-02-2022) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாங்குளத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண நீர்பாசன திணைக்களத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர் வேளாண்மையை ஊக்குவித்து எமது தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் தனது திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வு மகிழ்ச்சி அழிப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான திட்டங்களை பயனாளர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்ததுடன் நன்னீர் மீன்பிடியை மேலும் ஊக்குவித்தது வலுப்படுத்த கடல்தொழில் அமைச்சின் ஊடாக தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகள்: யது



