சம்பூரில் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி நிலையம்:பசில் இந்தியா செல்லும் உடன்படிக்கை கைச்சாத்து
திருகோணமலை மாவட்டம் சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்காக இலங்கை, இந்தியாவுடன் இணைந்து கூட்டு திட்டம் தொடர்பான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட உள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல் மின்சார கூட்டுத்தாபனம் ஆகியன இந்த உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திடவுள்ளன.
திருகோணமலை சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான முதல் கட்டப் பேச்சுவார்த்தைகள் இலங்கை மின்சார சபைக்கும் இந்திய நிறுவனத்திற்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பமாகின.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூரிய ஒளியில் இருந்து 50 மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான பூங்காவை அமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
சம்பூரில் நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இடத்திலேயே இந்த சூரிய மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளளது.
இந்த காணி சில வருடங்களுக்கு முன்னர் இந்திய நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. நிலக்கரி அனல் மின் நிலையம் நிர்மாணிக்கப்படுவதை கடந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தியாவின் NTPC Ltd என்ற இந்த நிறுவனம் இந்தியாவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய நிறுவனம் என்பதுடன் அந்நாட்டில் மொத்தமாக 60 ஆயிரம் மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது.