சீன ஆய்வு கப்பல் தொடர்பில் இந்தியா பதில்
இந்தியாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த பதிலை இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீனாவின் ஆய்வுக் கப்பலான யுவான் வாங் 5 வருவது தொடர்பில் தாம் அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதியன்று இந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையை அவதானித்து வரும் இந்தியா
இந்தநிலையில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு முன்னேற்றத்தையும் தமது அரசாங்கம் கவனமாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக பாக்சி குறிப்பிட்டார்.
இது ஒரு தெளிவான செய்தியாக இருக்கும் என்று தாம் நினைப்பதாக அவர் குறிப்பிட்டார். எனினும் இந்தியா என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது. யாருக்கு இந்த தெளிவான செய்தி அனுப்பப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்று ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இந்த கருத்துக்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை. அத்துடன் இலங்கை அதிகாரிகளையும் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த கப்பல் வருகை தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய இராஜதந்திரிகள்,
கடந்த திங்கட்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் இது குறித்து தமது நேரடி
எதிர்ப்பை வெளியிட்டதாக இலங்கை அரசாங்க அதிகாரி ஒருவர் ரொய்ட்டரிடம்
தெரிவித்துள்ளார்.