இலங்கைக்கு வழங்கிய கடன்களை நியாயப்படுத்தியுள்ள சீனா
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எப்போதும் இலங்கையை வழிநடத்தும் கோட்பாட்டை பின்பற்றுவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஒத்துழைப்பு திட்டங்களும் விஞ்ஞான திட்டமிடல் மற்றும் முழுமையான மதிப்பீட்டின் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அவை எந்த அரசியல் விடயத்திலும் இணைக்கப்படவில்லை.
அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அந்த கடன்கள் பங்களித்துள்ளதுடன் இலங்கை மக்களுக்கு உறுதியான நன்மைகளையும் கொண்டு வந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் கூறியுள்ளார்.
சீனா தொடர்பில் அமெரிக்கா குற்றச்சாட்டு
இலங்கைக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா முன்வந்துள்ளதற்கு அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சமந்தா பவர், சீனா வழங்கிய வெளிப்படைத்தன்மையற்ற கடன் உதவி குறித்து தனது அதிருப்தியையும் வெளியிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் கருத்து வெளியிடுகையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பல கூறுகளைக் கொண்டது.
சர்வதேச மூலதனச் சந்தை மற்றும் பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளைக் காட்டிலும் சீனா தொடர்பான கடன்களின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. சீனா பெரும்பாலும் இலங்கைக்கு குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீண்ட கால முதிர்ச்சியுடன் கூடிய முன்னுரிமைக் கடன்களை வழங்குகிறது.
இது இலங்கையின் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியது. சர்வதேச கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதாக இலங்கை அறிவித்த சிறிது நேரத்திலேயே சீன நிதி நிறுவனங்கள் இலங்கை தரப்பை அணுகியது.
அமெரிக்காவின் சமீபத்திய திடீர் வட்டி விகித உயர்வு
அத்துடன் சீனா தொடர்பான முதிர்ச்சியடைந்த கடன்களை கையாள்வதற்கும் சரியான வழியை கண்டறியவும் தயார் நிலையை காட்டியதாக சாவோ லிஜியன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சமீபத்திய திடீர் வட்டி விகித உயர்வு மற்றும் இருப்புநிலைக் குறைப்பு ஆகியவற்றின் விளைவாக உலகப் பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வழிதவறிய ஒருதலைப்பட்ச தடைகளே தொழில்துறைகளின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்து நாடுகளின் பொருளாதார மற்றும் நிதி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இலங்கை போன்ற வளரும் நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு அமெரிக்கா என்ன செய்திருக்கிறது என்று தன்னைத்தானே கேட்க வேண்டும் என்றும் சீன பேச்சாளர் மேலும் தெரிவித்தள்ளார்.