இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இந்தியாவின் ஆலோசனை
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்தி மாகாண சபைகளை இயங்கச்செய்வதன் ஊடாகவும் இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும் என இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஜெனிவா நேரப்படி நேற்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் இந்தியா சார்பில் உரையாற்றிய பிரதிநிதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க நடைமுறைப்படுத்தலில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார்.
இந்திய அரசாங்கத்தின் உதவிகள்
அதனைத் தொடர்ந்து, உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டனர்.
அதற்கமைய, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து இந்தியா சார்பில் உரையாற்றிய பிரதிநிதி, போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், இலங்கையில் புனர்வாழ்வளித்தல், மீள்குடியேற்றல் மற்றும் நாட்டை மீளக்கட்டியெழுப்பல் ஆகியவற்றுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 2022ஆம் ஆண்டு நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் பொருளாதார மீட்சி மற்றும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை ஆகியவற்றுக்கும் இந்திய அரசாங்கம் மிகையான உதவிகளை வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அதேவேளை, இலங்கையுடனான உறவைப் பொறுத்தமட்டில் தமிழ் மக்களுக்கான சமத்துவம், நீதி, சமாதானம் ஆகியவற்றுக்கும், மறுபுறம் இலங்கையின் இறையாண்மை, சுயாதீனத்துவம் ஆகியவற்றுக்கும் முன்னுரிமை அளித்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலும் அதற்குப் பங்களிப்புச்செய்யும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |