இந்தியா சிவப்பு பட்டியல் சேர்க்கப்பட்டமை மிகவும் தாமதமாக இருக்கலாம்! பேராசிரியர் மார்க் வால்போர்ட்
கோவிட் பரவல் மற்றும் புதிய மாறுபாடு குறித்த அச்சம் காரணமாக தடைசெய்யப்பட்ட நாடுகளின் "சிவப்பு பட்டியலில்" இந்தியா சேர்க்கப்படுவது மிகவும் தாமதமாக இருக்கலாம் என்று பிரித்தானியாவின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய மாறுபாடு அதிக அளவில் பரவக்கூடியது என்று தாம் நம்புவதாக பேராசிரியர் மார்க் வால்போர்ட் (Prof Mark Walport) பிபிசி செய்திசேவையிடம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 15 முதல் இந்தியாவில் தினமும் 200,000க்கும் மேற்பட்ட கோவிட் - 19 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. தலைநகர் டெல்லியில் ஒரு வார கால முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 23ம் திகதி அதிகாலை 4 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், பயண தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளின் "சிவப்பு பட்டியலில்" இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் (Matt Hancock) தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிரித்தானியா அல்லது ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், அல்லது பிரித்தானிய குடியுரிமை கொண்டவர்கள் நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள்,
எனினும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் அவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இந்நிலையிலேயே, தடைசெய்யப்பட்ட நாடுகளின் "சிவப்பு பட்டியலில்" இந்தியா சேர்க்கப்படுவது மிகவும் தாமதமாக இருக்கலாம் என்று பேராசிரியர் மார்க் வால்போர்ட் (Prof Mark Walport) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் இரட்டை மரபணு என்று அழைக்கப்படும் “B.1.617” உருமாற்றம் அடைந்த கோவிட் தொற்றால் பிரித்தானியாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.
இந்நிலையில் புதிய கோவிட் தொற்றான “B.1.617” தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளுக்கு கட்டுப்படுமா அல்லது அதைவிட வேகமாக பரவுமா என்பதை அறிந்து கொள்வதற்காக சோதனை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஆய்வு தரவுகளை படித்து பார்த்த பிறகு இந்தியாவை சிவப்பு பட்டியலில் ஒரு முன்னெச்சரிக்கை அடிப்படையில் சேர்த்துள்ளனர்.