ஐ.நா.வில் இலங்கை விடயத்தில் இந்தியா முடிவை மாற்ற வேண்டும்! ஸ்டாலின் அவசர கோரிக்கை
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கும், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்கும்பொருட்டு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கும் மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவமதித்து – அவர்களுக்கு அநீதி இழைத்து – இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுக்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அளித்துள்ள பேட்டியும் – அந்தப் பேட்டியின் மீது இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனமும், உலகத் தமிழர்கள் இடையேயும், தமிழகத்திலும், பேரதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்குச் சென்று வந்தார். பிரதமர் நரேந்திர மோடியும் – இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் பற்றி விவாதித்ததாக, பத்திரிகைச் செய்திகளில் எதுவும் வெளிவரவில்லை.
இலங்கை அரசு தொடர்பாக ஐ.நா. மன்றத்தில் நாளைய விவாதத்தின் போது, அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது மட்டுமின்றி, இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிடும் வகையில் – உறுப்பு நாடுகளின் ஆதரவினையும் திரட்டி – உரிய திருத்தங்களுடன் அந்தத் தீர்மானம் நிறைவேறிட பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என மேலும் பல கோரின்னைகளை உள்ளடக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..
திமுக தனது தேர்தல் அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கும், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்கும்பொருட்டு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கும் மத்திய அரசை வலியுறுத்தல், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயற்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் வடக்கு கிழக்கில் நீர்த்துப் போன அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய ஈழத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் இடையே ஐ.நா.வின் மேற்பார்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்த தமிழர்கள் குறித்தும் கரிசனை காட்டப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கும், இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புபவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.