இந்திய - இலங்கை மீனவா் பிரச்சினைக்கு தீர்வு: உறுதியளித்தது இந்தியா
இந்திய இலங்கை மீனவா்கள் தொடா்பான பிரச்சினைக்கு தீா்வைக்காண உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய உயா்ஸ்தானிகா் உறுதியளித்துள்ளாா்.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் நேற்று வடபகுதி மீனவர்களை சந்தித்து இந்த உறுதிமொழியை வழங்கினாா்.
இலங்கையின் வடமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் தலைவர்கள் குழுவினா், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன், திங்களன்று கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயைச் சந்தித்து, இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு பதிலளிப்பதில் இந்தியாவின் தாமதம் குறித்து கவலை தெரிவித்தனர்.
இதன்போதே பிரச்சினைக்கு உடனடித்தீர்வு வழங்கப்படும் என்று இந்திய உயா்ஸ்தானிகா் குறிப்பிட்டாா்.
கடந்த வாரம் உயர்ஸ்தானிகர் பாக்லே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) தலைவர் ஆர்.சம்பந்தனைச் சந்தித்ததன் தொடா்ச்சியாகவே நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே "2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், இழுவைப் படகுப் பழக்கத்தை நிறுத்துவதற்கும் முடிவுக்கு கொண்டுவருவதற்கும் இந்தியத் தரப்பு இரண்டு தடவைகளாக ஒப்புக்கொண்டதை மீனவ சமூகத் தலைவர்கள் இந்திய உயா்ஸ்தானிகரிடம் நினைவு கூர்ந்தனர்.
இந்தநிலையில் மீனவத் தலைவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் உணர்வுகளை புது தில்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு நாடுகளுக்கும் தெரிவிப்பதாக உயா்ஸ்தானிகா் கூறினாா்.
அத்துடன் நீண்ட காலத் தீர்வுகளுக்கு நேரம் எடுக்கும் அதேவேளை, இதற்கிடையில் சில குறுகிய கால நடவடிக்கைகளைக் கொண்டு வருவது முக்கியம் என்பதை அவர் ஏற்றுக்கொண்டாா் என்றும் நாடாளுமன்ற உறுப்பினா் எம் ஏ சுமந்திரன் த ஹிந்துவிடம் தொிவித்துள்ளாா்.