இலங்கை உட்பட்ட 6 நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி
இலங்கை(Sri lanka), பங்களாதேஷ், ஐக்கிய அரபு ராச்சியம், பூட்டான், பஹ்ரைன், மொரிஸியஸ் ஆகிய 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்திய மத்திய அரசாங்கம்(Government of India) அனுமதி அளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்ததன் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காய ஏற்றுமதி
இந்நிலையில் ஏற்றுமதியை எளிதாக்க, தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட், இந்த நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது.
கூடுதலாக, மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளுக்காக 2000 டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது.
இதற்கிடையில் சேமிப்பு இழப்பைக் குறைக்க, கடந்த ஆண்டு 1200 மெட்ரிக் டன்னாக இருந்த வெங்காயத்தின் குளிர்பதன அளவை, இந்த ஆண்டு 5000 மெட்ரிக் டன்னாக உயர்த்த நுகர்வோர் விவகாரத் துறை முடிவு செய்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப ஆதரவு கோரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெங்காயக் கதிர்வீச்சு மற்றும் குளிர்பதனக் கிடங்கு போன்றவற்றால் 10 சதவீதத்திற்கும் குறைவான சேமிப்பு இழப்பே ஏற்பட்டதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.