சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனிடம் மீண்டும் விசாரணை
மட்டக்களப்பு சுதந்திர ஊடகவியலாளரும், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் மட்டக்களப்பு முழுநேர ஊடக சங்கத்தின் தலைவருமாகிய புண்ணியமூர்த்தி சசிகரனை மட்டக்களப்பு பொலிஸார் இன்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.
இன்று (14) காலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை பொலிஸார் சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் இன்று அவர் சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கொழும்பு பொலிஸ் ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு செய்தி தலைப்பின் அடிப்படையில் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனிடம் விசாரணை நடாத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது, கடந்த மாதம் என்னை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
இதன் பொது நான் வெளியில் வந்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவித்திருந்தேன். அப்போது இலங்கை அரசாங்கம் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் பிரயோகிக்கும் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊடக அமைச்சர்கள் இது குறித்து கவனத்தில் எடுக்கவேண்டும்.
என்னைத் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்துவதால் நான் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் கூறியிருந்தேன். குறித்த எனது கருத்தின் அடிப்படையில் இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிலோன் நியூஸ் நிறுவனம் செய்தி பிரசுரித்திருந்தது அந்த செய்தியின் அடிப்படையில் இன்று என்னிடம் சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
கடந்த சில மாதங்களாக ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியான இவ்வாறான விசாரணைகள் நடைபெற்று வருகிறது அதுவும் என்னை பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் என்னை கைது செய்வதற்காகவே இவ்வாறான விசாரணைகள் நடைபெறுகிறது என்ற அச்சம் காரணமாக நான் கைது செய்யப்படலாம் என்ற கருத்தைக் கடந்த விசாரணையின் போது கூறியிருந்தேன்.
அதன் அடிப்படையில் குறித்த செய்தியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதற்காக நான் இன்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன். இவ்வாறான விசாரணை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இது போன்ற விசாரணைகள் எமது கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக செயற்பாடுகளுக்கு பாரிய தடையாக உள்ளது.
எனவே எது எவ்வாறாக இருந்தாலும் தொடர்ச்சியாக ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுவதும் கண்காணிக்கப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  


 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        