சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள்! (Photos)
இலங்கையின் 74ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தில் மக்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
இலங்கை சுதந்திர தினமான இன்றைய நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
“தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை நடத்து”, “வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி”, “அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்”, “பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு” போன்றவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறு யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் பகுதி வரை பேரணியாக சென்று அங்கும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
இலங்கையின் 74 ஆவது சுதந்திர நாளான இன்று (04.02) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதியினை சர்வதேசத்திடம் வலியுறுத்தி முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இன அழிப்பின் நினைவுச்சின்னமாக காணப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அணிதிரண்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்த மக்களின் நினைவாக சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தி விட்டு கவனயீர்ப்பு பேரணியினை தொடங்கியுள்ளார்கள்.
நடைபயணமாக முல்லைத்தீவு நோக்கி புறப்பட்ட்ட கவனயீர்ப்பு காரர்கள் வட்டுவாகல் கோட்டபாய கடற்படை தளத்தின் முன்னால் நின்று தங்கள் கவனயீர்பினை உரக்க வெளிப்படுத்தினார்கள்.
வட்டுவாகல் பாலத்தில் தீ பந்தங்கைள ஏந்தியாவாறு 2009 ஆம் ஆண்டு இந்த பாலம் ஊடாகவே தங்கள் பிள்ளைகள், உறவுகள்,கணவன்மார்களை இராணுவத்தினரிடம் கையளித்துவிட்டு அனைத்தினையும் இழந்து இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்ற இறுதி பாதையாக இந்த வட்டுவாகல் பாலம் காணப்படுகின்றது.
இந்த பாலத்தில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தி செல்லும் வரை கோசங்களை எழுப்பியவாறு சென்று செல்வபுரம் புனித யூதா தேவாலயம் வரை சென்றடைந்து அங்கு தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள் இந்த கவனயீர்ப்பு பேரணியின் போது முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு நிலமீட்பு போராட்ட குழுவினரும் தங்களை இணைத்துக்கொண்டுள்ளார்கள்.
நடைபெறவுள்ள ஜக்கியநாடுகள் மனித உரிமைகூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதியினை பெற்றுத்தர வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதன்போது கோரிக்கை விடுத்து தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
கவனயீர்ப்பு போராட்டம் தொடங்கிய இடம் தொடக்கம் நிறைவடைந்த இடம்வரை சிவில் உடை தரித்த புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலர் ஒளிப்படங்கள் எடுத்துள்ளார்கள்.
இது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை அச்சுறுத்தும் செயற்பாடு என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.














