75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டுநினைவு முத்திரை வெளியீடு (Photos)
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு இன்று (02.02.2023) முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.
இந்த நினைவு முத்திரையை வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவும் நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.
தபால் திணைக்களத்தின் பாரம்பரிய நடவடிக்கைகளுக்கு அமைவாக 50 ரூபா பெறுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நினைவு முத்திரை மற்றும் அதன் முதல் நாள் கடித உறை என்பன இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் உப தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும்.
அத்துடன் கண்டி, திருகோணமலை, குருநாகல், காலி மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள விசேட முத்திரை கருமபீடங்கள் ஊடாக இந்த நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உறையை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை இலங்கை முத்திரைப் பணியகம் மேற்கொண்டுள்ளது.
முத்திரை கண்காட்சி
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முத்திரை கண்காட்சி மற்றும் அருங்காட்சியக கண்காட்சி என்பன பெப்ரவரி 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபா பெறுமதியுள்ள நினைவு நாணயம் புழக்கத்திற்கு விடப்பட மாட்டாது என்பதோடு, இது இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 71 வது நினைவு நாணயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நினைவு நாணயத்தில் "75" என்ற எண் பெரிதாக காட்டப்பட்டுள்ளதோடு இலங்கையின் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்துள்ள மாதிரிவடிவம் ஒன்றும் அதன் மையத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
நாணயத்தைச் சுற்றி ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் "சுதந்திரக் கொண்டாட்டம்" என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாணயத்தின் கீழ் பகுதியில் "1948 - 2023" ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாணயத்தின் மறுபுறம் மையத்தில் அதன் பெறுமதி "1000" என பெரிய எண்களில் காட்டப்பட்டுள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் “ரூபாய்” என்ற வார்த்தைகள் முகப்பகுதியின் கீழேயும் இலங்கையின் அரச சின்னம் முகப்பகுதியின் மேலேயும் பொறிக்கப்பட்டுள்ளன.
நாணயத்தின் மேல் பகுதியில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் “இலங்கை " என்ற வார்த்தை உள்ளது.
வெகுசன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட, பதில் தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யு.எம்.ஆர்.பி.சத்குமார, பிரதி தபால் மா அதிபர் (நடவடிக்கைகள்) ராஜித கே. ரணசிங்க, பிரதி தபால் மா அதிபர் (மத்திய மாகாணம்) சமீசா டி சில்வா, முத்திரைப் பணியகத்தின் பணிப்பாளர் லங்கா டி சில்வா, சிரேஷ்ட பிரசார அதிகாரி சன்ன முனசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.








இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
