வடமராட்சியில் நூற்றுக் கணக்கில் ஒன்று குவிந்த மக்கள்! போராட்ட வடிவத்தை மாற்றிய கடற் தொழிலாளர்கள் (Photo)
நாடு முழுவதும் இன்றைய தினம் இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணம் - வடமராட்சியில் கடற் தொழிலாளர்கள் சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அனுஷ்டித்துள்ளனர்.
இந்திய கடற் தொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் கடற் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமராட்சி - சுப்பர்மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்திய கடற் தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், நேற்று மாலை பொலிஸாரினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான கடற் தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மீனவர்கள் கடந்த 31ம் திகதி முதல் பருத்தித்துறை - பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளமை, பொதுமக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு விளைவித்தல் , கொரோனா அபாயம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பருத்தித்துறை காவல்துறையினர் , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் போராட்டத்திற்கு எதிராக தடையுத்தரவை பெற்று இருந்தனர்.
நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து நேற்றைய தினம் இரவு கடற் தொழிலாளர்கள் வீதி மறியல் போராட்டத்தினை கைவிட்டனர். இந்நிலையில் இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தினை கரிநாளாக அனுஷ்டித்து கடற் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் 27ம் திகதி கடலுக்கு சென்ற வத்திராயன் கடற் தொழிலாளர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், இதுவரை காலமும் இந்திய கடற் தொழிலாளர்களின் அத்துமீறல்களால் உயிரிழந்த கடற் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து மெழுகு திரிகளை ஏந்தி , கருப்பு கொடிகளுடன் கடலில் இறங்கி கடற் தொழிலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.







நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening