சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள்: அருட்தந்தை மா.சத்திவேல்
சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்பதனை இவ்வருடமும் வெளிப்படுத்துவோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினம் தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பை
இலங்கையில் சுதந்திர தினம் என்பது தமிழர்களை பொறுத்தளவில் என்றுமே கரிநாளே.சிங்கள ஆதிக்க மேட்டுக்குடியினர் சிங்கள பௌத்த கருத்தியலுக்குள் அரசியலைக் கட்டி எழுப்பி அதற்கேற்றவாறு அரச கட்டமைப்பையும் பலப்படுத்தியதோடு அடிமட்ட சிங்கள மக்களையும் அதே கருத்தியலுக்குள் மூழ்க வைத்துள்ளனர்.
அத்துடன் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பை முன்னெடுத்து இறுதியில் இன படுகொலையையும் அரங்கேற்றி அதற்கென்று வருடம் தோறும் விழா எடுப்பதோடு சுதந்திர தினத்தையும் அதனையே மையப்படுத்தி நடத்துகின்றனர்.
தமிழர்களை அழிக்க பயன்படுத்திய ஆயுத தளபாடங்களை தம் வலிமையாக காட்டி யுத்தத்தில் ஈடுபட்ட படையினருக்கு கௌரவ பட்டத்தினையும் இத்தினத்தில் வழங்கி வருகின்றனர்.
தமிழர்களுக்கு கரிநாள்
சுதந்திர தினம் என்பது தமிழர்களுக்கு கரிநாள் என்பதனை கடந்த காலம் முழுவதும் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.இதனை இவ்வருடம் முழுமையாக மக்கள் மையப்படுத்தி வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் சமூக அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு முன்னெடுக்கும் மக்கள் பேரணிக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு பூரண ஆதரவை நல்குகின்றது.
2009 ஆம் ஆண்டு ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் இன அழிப்பு திட்டங்கள் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
மாகவலி நீர் வடக்குக்கு கொண்டு செல்லப்படுகின்றதோ இல்லையோ மாகவலி எல் வலயம் வடக்கு குடாநாட்டையும் சிங்களமயப்படுத்தும் கருத்திட்டமாக வகுக்கப்பட்டுள்ளது.
நல்ல அறிகுறிகள் தென்படவில்லை
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் படையினர் கையகப்படுத்தியுள்ள தனியார் காணிகள் மீண்டும் கொடுக்கப்படும் என கூறப்பட்டாலும் அது தொடர்பில் நல்ல அறிகுறிகள் தென்படவில்லை.
அரசியல் கைதிகளின் விடுதலையிலும் முன்னேற்றம் இல்லை. யுத்த குற்றத்திற்கு நீதி செய்வதற்கும் ஆட்சியாளர்கள் ஆயத்தமில்லை.வலிந்து காணலாக்கப்பட்டோர் விடயத்தில் கண்துடைப்பு நாடகமே தொடர்கின்றது.
யுத்தத்திற்கு முகம் கொடுத்த மக்கள் அவல நிலையில் வறுமைக்குள் வாழ தள்ளப்பட்டுள்ளனர்.இத்தகைய சூழ்நிலையில் இலங்கையின் 75 ஆண்டுகால தமிழர்களின் அவல நிலை, அரசியல் எதிர்காலமின்மை, சமூக நீதி, அரசியல் நீதி மறுக்கப்படுகின்றமை, தொடர்ந்து ஏமாற்றத்துக்குள் தள்ளும் நிலை என்பவற்றை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் சுதந்திர கரிநாள் எதிர்ப்பு பேரணியில் வடகிழக்கு மக்கள் அமைப்பு ரீதியாகவும், தனித்தனியாகவும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேர்தல் கால கட்சி அரசியல்
தேர்தல் கால கட்சி அரசியலுக்கு இடம் கொடாது மக்கள் சக்தியை தெற்கிற்கும், சர்வதேசத்திற்கும் மீண்டும் வெளிப்படுத்திட ஒன்று திரளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
சுதந்திர தனி ஈழத்திற்கான போராட்டத்தை அழித்து பூகோள அரசியல் செய்யும் சக்திகள் ஒருபுறம் பேரினவாதிகளுக்கு துணை நின்று தமிழர் தேசியத்தை அழிக்கும் சக்திகள் இன்னுமொரு புறம் என அழிவு சக்திகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
அச்சக்திகளுக்கு எம் பலத்தை காட்டவும் தமிழர் தாயக தேசிய அரசியல் அபிலாசைகளை மீண்டும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு வெளிபடுத்தவும் மக்கள் பேரணியை பலப்படுத்துவது தாயக தேசியம் பேசும் நம் அனைவரின் சூழ் நிலை கடமையாகும் என தெரிவித்துள்ளார்.