இலங்கை - இந்திய மூன்றாவது ரி20 போட்டி : போராடி தோற்றது இலங்கை அணி
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், சுப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் இருபதுக்கு 20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று(30) இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்று கொண்டது.
இந்நிலையில் 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து, வழங்கப்பட்ட சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 2 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் பந்திலேயே 4 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியது.
இரண்டாம் இணைப்பு
இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணிக்கு 138 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மகிஷ் தீக்சன 3 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தனது முதல் ரி20 சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி சார்பாக இணைந்துகொண்ட சமிது விக்கிரமசிங்க தனது 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணி சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
முதலாம் இணைப்பு
இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டி சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போட்டி இன்று (30) பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றது.
நாணய சுழற்சி
மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதை இரவு 8 மணி வரை ஒத்திவைக்க நடுவர்கள் முடிவு செய்திருந்த நிலையில் நாணய சுழற்சி இரவு 7.40 மணியளவில் இடம்பெற்று நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், இந்த போட்டிக்கான இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தசுன் சானகவிற்கு பதிலாக சமிந்து விக்ரமசிங்கவை அழைக்க தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளதுடன் இது சமிந்துவின் முதலாவது சர்வதேச ரி20 போட்டியாகும்.
இதற்கிடையில், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ஹக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த் ஆகியோர் இந்தப் போட்டிக்கு பெயரிடப்படவில்லை.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |