கந்தளாய் பகுதிகளில் அதிகரிக்கும் யானை அச்சுறுத்தல் - அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட மதரஸா நகர் பகுதியில் காட்டு யானைகளின் ஊடுருவலும் சேதங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மதரஸா நகர் குடியிருப்புப் பகுதிக்குள் ஒரே நேரத்தில் மூன்று காட்டு யானைகள் திடீரெனப் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததை தொடர்ந்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகளின் நீண்டநேர தீவிர முயற்சிகள் மற்றும் போராட்டத்திற்குப் பின்னர், மறுநாள் அந்த யானைகளை பாதுகாப்பாக காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று(07.10.2026) 2ஆம் மற்றும் 3ஆம் குலனிப் பகுதிகளில் காட்டு யானை புகுந்து வீடொன்றைச் சேதப்படுத்தியுள்ளதுடன், தென்னை மற்றும் வாழைப்பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
விவசாயக் காலங்களில் வயல்வெளிகளில் உலாவும் யானைகள், அறுவடை முடிந்தவுடன் உணவைத் தேடி கிராமங்களுக்குள் தொடர்ச்சியாக நுழைகின்றன.

மின்சார வேலி இல்லாத காரணத்தினால் கிராமத்தில் முறையான யானை பாதுகாப்பு வேலி அமைக்கப்படாததே, யானைகள் தங்கு தடையின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் ஊடுருவுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
ஒவ்வொரு முறையும் யானைகளை தற்காலிகமாக விரட்டுவதோடு நிறுத்தாமல், கிராம மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க வனஜீவராசிகள் திணைக்களமும் உரிய அதிகாரிகளும் நிரந்தர மின்சார வேலி திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

