இலங்கையில் அத்தியாவசிய உணவு பற்றாக்குறை அதிகரிப்பு - தொடர் வீழ்ச்சியில் பொருளாதாரம்
இலங்கையில் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மக்களின் எண்ணிக்கை மேலும் 1.3 மில்லியனால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பொருளாதாரக் காரணிகளால், இவ்வாறு அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு
இந்த அறிக்கையின்படி, ஏழ்மையான நாடுகளில் வாழும் மக்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தில் பெரும்பகுதியை உணவுக்காகவே செலவிடுவதாகவும், இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் உலக உணவுத் திட்டத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் விளக்கியுள்ளார்.

இதற்கமைய, மத்திய கிழக்கு நெருக்கடி வரும் நாட்களில் தணிந்தாலும் கூட, உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு, வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்தமை போன்ற மோசமான விளைவுகளால், எதிர்வரும் சில மாதங்களில் இந்த நாடுகளில் உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை எச்சரித்துள்ளது.
ஜூன் மாத இறுதியில் உலகளவில் புதிதாக 45 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஏற்கனவே நிதியுதவிக் குறைப்புகளை எதிர்கொண்டுள்ள உலக உணவுத் திட்டம், இந்த மனிதாபிமான நெருக்கடியைத் தடுப்பதற்காக சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.