முல்லைத்தீவு பாடசாலைகளில் அதிகரிக்கும் இடைவிலகல் : அதிர்சியளிக்கும் காரணங்கள்
முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துச் செல்வதுடன் இடைவிலகல்களை குறைத்துக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில், மாணவர்களின் இடைவிலகல்களுக்கான காரணங்களை ஆராய மேற்கொண்ட முயற்சிகளின் போது அதிர்ச்சியளிக்கும் காரணங்கள் கண்டறியப்பட்டன.
இலங்கையில் 18 வயதுவரையுள்ள அனைவருக்கும் கட்டாய கல்வி நடைமுறையில் இருக்கின்ற வேளை அந்தக் கல்வி இலவசக் கல்வியாகவும் அமைந்துள்ளது.
தொடர் சர்ச்சைக்குள் சிக்கும் அமைச்சர் ஜீவன்! பொலிஸ் மா அதிபரின் உத்தரவை இரத்துச் செய்த அமைச்சர் டிரான்
ஆரோக்கியமான பயன்பாடு மிக்க கல்விச் சமூகம் ஒன்றிணை உருவாக்கும் முயற்சியில் வடக்கு மாகாணம் தோல்வி நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது .அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த தோல்வி நோக்கிய பாய்ச்சல் மிக வேகமாக நடைபெற்று வருவதாக சமூக விடய ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோரிடையே ஏற்பட்ட பொறுப்புணர்ச்சியற்ற தன்மை இந்த நிலைக்கு முதன்மைக் காரணமாக அமைகின்றது.பாடசாலைகளில் சிறந்த கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளோடு சிறந்த வழிகாட்டல்கள் இன்மை இரண்டாவது காரணமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
சமூக ஆர்வலர்களின் விசனம்
தரம் 5இல் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களில் பலர் க.பொ.த.சாதாரண தரத்தில் தோல்வியடைகின்றனர்.அத்துடன் இன்னும் சிலர் பரீட்சைக்கு தோற்றுவதிலேயே தோல்வியடைந்து இடை விலகி இருக்கின்றனர்.
திறமையான மாணவர்கள் என்ற வாதத்தினை முன்கொண்டு மாணவர்களின் நற்பண்புகளை ஆராயும் சமூக வழமை இப்போது மெல்ல மெல்ல மாற்றப்பட்டுக் கொண்டு செல்வதனையும் சமூகத்தில் அவதானிக்க முடிகின்றது.
படித்தவர்கள் அரச பதவியில் இருப்பவர்கள் மீது அதிகளவிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் சமூக சூழலைச் சுட்டிக் காட்டும் சமூக ஆர்வலர்கள் தங்கள் விசனத்தையும் வெளிக்காட்டி வருகின்றனர்.
க.பொ.த சாதாரண தரத்தில் எல்லாப் பாடங்களிலும் A தரத்திலான சித்திகளையும் பெற்ற மாணவர்கள் கூட தங்களின் உயர்தரப் பரீட்சையில் தோல்வியடைவதும் அதற்கு பொருத்தமான காரணங்களென நொண்டிச் சாட்டுக்களை முன்வைப்பதுமாக இருக்கின்றனர்.
இன்னும் சில அவதானிப்புக்கள் ஊடாக க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடப் பிரிவுகளில் தங்கள் கற்றலைத் தொடர்ந்தவர்கள் பாடசாலையை விட்டு விலகி திருமணமாவதும் இன்னும் சிலர் பணம் சம்பாதிக்கச் செல்வதும் மற்றும் சிலர் போதைக்கு அடிமையாகி தங்கள் திறமைகளை வீணடித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
இன்னும் சில அவதானிப்புகள்
இந்த அவதானங்கள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரிடம் இது எதனால் நிகழ்கின்றது.இதனை தடுக்கும் வழிமுறைகள் எதுவாக இருக்கும் என வினவிய சந்தர்ப்பம் ஒன்றிலேயே அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்ததோடு தங்கள் விசனத்தையும் வெளிக்காட்டியிருந்தனர்.
மாணவர்கள் இடைவிலகி தவறான வழிகளில் செல்வதற்கான முழுப் பொறுப்பும் பெற்றோர்களையும் ஆசிரியர்களையுமே சாரும் என்பது அவர்களது வாதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோரிடையே உருவாகி வரும் போலி மோகம் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்களிடையே தோன்றிவரும் சமூக அக்கறையின்மையும் மாணவர்களின் இடைவிலகலுக்கு பெருமளவில் துணை செய்கின்றன.
இதனால் தமிழ் மக்களின் கல்வியியல் எதிர்காலமே வீணடிக்கப்பட்டு எதிர்காலத்தில் வளமற்ற கல்வியறிவற்ற ஒரு பெரும் கூட்டத்தினை கொண்ட சமூகமாக நாம் மாறிவிட இந்த இடைவிலகல்கள் வழிவகுத்துப் போகும் என்பது திண்ணம்.
பிரச்சினைகளை ஆராய்தல்
மாணவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகிச் செல்வதற்கான காரணங்கள் என ஒரு சிலவற்றை சுட்டிக்காட்ட முடிந்த போதும் அவற்றிலிருந்து வேறுபட்டு இன்னும் சில காரணங்களையும் அவதானிக்க முடிகின்றது.
குடும்ப வறுமை முதன்மைக்காரணமாக இருப்பதனை இனங்காணலாம்.பொருளாதார நெருக்கடியான இன்றைய சூழலில் குடும்பச் செலவுகளுக்கான நிதியை திரட்டுவதற்காக அக்குடும்பங்களில் உள்ள மாணவர்கள் வேலைக்குச் செல்லும் ஒரு சூழல் உருவாக்கப்படுகின்றது.சில குடும்பங்களில் அது தவிர்க்க முடியாத சூழலாக இருப்பது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.
மாணவர்களிடையே ஏற்பட்டுவரும் பள்ளிக்கால காதல் அணுகுமுறையும் இடைவிலகலுக்கு காரணமாக அமைந்துள்ளது.அண்மையில் க.பொ.த சாதாரண தரத்தில் திறமைச்சித்திகளைப் பெற்று உயர்தரத்தில் உயிரியல் மற்றும் வணிகப் பிரிவில் தங்கள் கல்வியைத் தொடர்ந்த இரு மாணவிகள் பாடசாலையை விட்டு இடை விலகி திருமணமாகிய செய்தி சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததை அவர்களிடையேயான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
ஆசிரியரின் கருத்து
ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்து கொள்ளும் முறையிலும் இடைவிலகலுக்கான சூழல் தோன்றுவதாக முல்லைத்தீவில் பிரபலமான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருடன் மேற்கொண்டிருந்த இது தொடர்பான கலந்துரையாடலின் போது அறிந்து கொள்ள முடிந்தது.
ஆசிரியர்கள் கண்டித்து அரவணைப்பது மற்றும் அரவணைத்து கண்டிப்பது போன்ற அணுகு முறையினை பின்பற்றாது மாணவர்களின் நடத்தைக் கோலத்தை வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்பாக ஒரு எண்ணக் கருவை உருவாக்கிக் கொள்கின்றனர்.
ஆயினும் அவ்வாறில்லாது ஆசிரியர்கள் தங்கள் எண்ணக் கருக்களில் உள்ள சமூகம் ஒன்றிற்கான நற்பிரஜைகள் தொடர்பான எண்ணக்கருவை அடிப்படையாக் கொண்டு மாணவர்களின் நடத்தைக் கோலத்தினை மாற்றியமைக்க வேண்டும் என அந்த ஆசிரியர் தொடர்ந்து விளக்கியிருந்தார்.
இடைநிலை மாணவர்களின் இடைவிலகலுக்கு மாணவர்கள் தங்களுக்கான கற்பித்தலின் போது பாடப்பரப்புக்களை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத சூழல் தொடர்ந்து செல்வதாலேயே இடை விலகிச் செல்கின்றனர் என்று அவ்வாறு இடைவிலகிய சில இடைநிலை மாணவர்களுடனான உரையாடலின் போது அறிய முடிகின்றது.
மாணவர்களின் இடைவிலகலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன என்பது தேடலின் போது பெறப்பட்ட தகவல்கள் மூலம் அறிய முடிக்கின்றது.துறைசார் அதிகாரிகள் இந்தச் சுட்டிக் காட்டல்களை அடிப்படையாக் கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுவதும் நோக்கத்தக்கது.
இன்றைய கல்வி முறை
இடை விலகல் என்பது நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு சிக்கல் நிலையாகும்.எனினும் அதன் தாக்கம் சமூகத்தில் ஏற்படுத்தி வந்த மாற்றம் முன் போல் இனியும் இருக்காது என்பதை காலவோட்டத்தின் நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆரம்ப காலங்களில் இருந்த இடைவிலகல்களின் போது அதிகமாக இடைவிலகிய மாணவர்கள் கல்வியில் அதிக திறமையை வெளிக்காட்டாதவர்களாகவே இருந்துள்ளனர்.
எனினும் இன்று அதற்கு நேர் எதிர்மாறாக மிகத் திறமையான மாணவர்கள் கூட இடைவிலகி தங்கள் கல்வியை தொடராது கைவிடும் போக்கு தோன்றியுள்ளது.
கல்வி கற்றுத்தான் பயனடைய முடியும் என்ற வகையிலான எண்ணக்கருவை ஊட்டி மாணவர்களின் கல்வியை தொடரச் செய்யும் போக்கினை மாற்றியமைக்க வேண்டிய தேவை கல்வியலாளர்களுக்கு ஏற்பட்டு வருகின்றது என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
கல்வியறிவு இல்லாத வாழ்வியல் அனுபவத்தினைக் கொண்டு வளமாக வாழும் மக்கள் பலர் சமூகத்தில் இருக்கின்றனர்.அவர்களை முன்னுதாரணமாக கொண்டு தங்களை வடிவமைக்க இளையவர்கள் முயன்று வருவதை அவதானிக்க முடிகின்றது.
இந்த சூழலில் இன்றைய கல்வி முறையும் மாணவர்களின் இடைவிலகலுக்கு காரணமாக இருக்கலாம் என்ற கூற்றையும் புறம் தள்ளிப்போக முடியாது.
ஆகவே மாணவர்களின் இடைவிலகல் என்பது முல்லைத்தீவில் மட்டுமல்ல முழு நாட்டிற்குமே எதிர்காலத்தில் பெரும் தலைவலியை ஏற்படுத்தப்போகும் ஒரு விடயமாகும் என்பது நோக்கத்தக்கது.
ஈழத்தமிழர்களின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சிறந்த கல்வி என்பதை கருத்தில் கொண்டால் ஈழத்தமிழ் சமூகம் தம்மிடையே ஏற்படும் மாணவர் இடைவிலகலின் காரணங்களை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டு அதனை தவிர்க்க முன்கூட்டியே ஆயத்தமாதல் சாலப் பொருத்தமானதாக இருக்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |