மட்டக்களப்பில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை(Video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு தாக்கம் உள்ள பகுதிகளில் புகை விசுறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் டெங்கு தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அப்பகுதிகளில் புகை விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாமாங்கம் பொதுச்சுகாதார பரிசோதகர் கிஷான்தராஜ் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையில் சுற்றாடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வரும் நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இம்மாதம் 06 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார பிரிவினரால் சோதனை
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், நுளம்பு பெருக்கம் உள்ள இடங்கள்
அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் அவர் தெரிவித்தார்.





