நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள்! (Photos)
நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பாணந்துறை
பாணந்துறை பிரதேசத்தில் வளர்ப்பு நாயொன்றைத் திருடி விற்ற போதைப்பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, பெக்கேகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் தன் வீட்டில் வளர்த்த ஜேர்மன் ஷெப்பர்ட் ரக நாயொன்று காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் நாயைத் திருடிச் சென்ற நபரைக் கண்டறிந்து அவரைக் கைது செய்துள்ளனர்.
மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான குறித்த நபர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட நாயின் பெறுமதி 50ஆயிரம் ரூபா என்றும், எனினும் குறித்த போதை ஆசாமி அதனை 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளமையும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட நாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி: அசார்
புத்தளம்
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மரப் பலகைகளை கடத்திச்செல்ல முற்பட்ட ஒருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் தடுப்புப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கைது நடவடிக்கை இன்று (21.05.2023) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பலகைகளை டிப்பர் வாகனத்தில் கடத்திச் செல்வதாக கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் கல்குளம் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது தேக்கு மற்றும் பாலை மரப்பலகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பிராந்திய பொலிஸ் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்குளம் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸ் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட தேக்கு மற்றும் பாலை மரப்பலகைகளை புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தளம் பிராந்திய பொலிஸ் தடுப்புப் பிரிவினர் இதன்போது தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |