தமிழர் பகுதியில் அதிகரிக்கப்படும் நில ஆக்கிரமிப்பு - சிவஞானம் சிறீதரன் குற்றச்சாட்டு (Video)
கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் தெற்கு பகுதியில் 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி அலுவலகத்தில் இன்று(15-04-2023) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
காணிகள் அபகரிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதிலும் நிலங்களை சுவீகரிப்பதிலும் இந்த அரசாங்கம் குறியாக இருந்து வருகின்றது. குறிப்பாக பூநகரி பிரதேசத்தில் அட்டை பண்ணைகள், இறால் பண்ணை என்ற பெயரில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.
இதேவேளை 2009 ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் இரணைமடுவின் தெற்கு பகுதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பதுடன் காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
சிங்கள குடியேற்றங்கள் குடியமர்வு
அதுமட்டுமின்றி அந்த பகுதியில் இருக்கின்ற காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களை நிறுவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பிரதேசங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சென்று உண்மைகளை அறிவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி அமைச்சர்
த.குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபையினுடைய தவிசாளர் வேழமாலிகிதன், பூநகரி
பிரதேச சபையினுடைய தவிசாளர் சிறிறஞ்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய
தவிசாளர் சுப்ரமணியம் சுரேன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



