வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி: சந்திரகுமார்
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த நிலைமை என்பது ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு,எமது சமூக வீழ்ச்சியே முக்கிய காரணமாக காணப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூக வீழ்ச்சிக்குப் பிரதான காரணம், சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமையே. சரியான அரசியல் தலைமைத்துவத்தின் வழிகாட்டல் இல்லாத சமூகங்களின் நிலைமை இவ்வாறு தான் காணப்படும்.
அரசியல் முறைக்கேடுகள்
இந்நிலையில் இயற்கை வளத்தைச் சிதைக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு, காடழிப்பு, சட்டவிரோத மது உற்பத்தி போன்றவற்றில் ஈடுபடுவோரில் அதிகமானோர் சில அரசியற் கட்சிகளின் ஆட்களாகவும் ஆதரவாளர்களாக மற்றும் உறுப்பினர்களாக காணப்படுகின்றனர்.
இவர்களால் எப்படி மக்களுக்குச் சரியான வழிகாட்டுதலைச் செய்ய முடியும், இப்படியே காணி அபகரிப்பு, ஊழல் முறைகேடுகள், நிர்வாகச் சீரழிவுகள் என எமது சமூகத்தைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பன தலைதூக்கியுள்ளது.
என்றுமில்லாத அளவுக்கு வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய தரப்பினர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
திட்டமிட்ட சதி
இந்த போதைப்பொருள் பாவனை திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலா என்ற சந்தேகமும் பொது மக்கள் மத்தியில் வலுவாக காணப்படுகிறது.
இதைக்குறித்து ஊடகங்கள், சமூக மட்ட அமைப்புகள், அரசியற் தலைமைகள், பொலிஸ் மற்றும் சட்டத் தரப்புகள் ஒருங்கிணைந்து செயற்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பாடசாலை மாணவர்கள் தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையே இதில் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல், உள ரீதியாக இவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இளைய சமூகத்தை பாதுகாத்தல்
சிலர் வன்முறைகளிலும் திருட்டிலும் ஈடுபடுகின்றனர். இளைய தலைமுறை பாதிக்கப்பட்டால் எதிர்காலச் சமூகமே பாதிப்புக்குள்ளாகும். இன விடுதலை, தேச விடுதலையைப் பற்றிப் பேசுகிறோம். அதற்கு ஆதாரமானவர்கள் எங்கள் இளைய தலைமுறையினர்.
மேலும், நிலத்தைப் பாதுகாப்பதைப் போல, எமது
மொழியை, பண்பாட்டை, வளங்களைப் பாதுகாப்பதை போல எமது இளைய தலைமுறையையும்
நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களே எமது மிகசிறந்த வளமாகும்.
ஆகவே இதைக்குறித்து நாம் மிகக் கரிசனை கொண்டு செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
