போஷாக்கான உணவை உட்கொள்ள குடும்பம் ஒன்றுக்கு தேவையான தொகை அதிகரிப்பு
இலங்கையில் தற்போது குடும்பம் ஒன்று, போஷாக்கான உணவினைப் பெற்றுக் கொள்ள தேவைப்படும் தொகையானது 700 ரூபாவா அதிகரித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறு குறித்த தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வயம்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரேணுக சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 2018ஆம் ஆண்டு 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலப்பகுதியில் இந்த தொகையானது 450 ரூபாவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தம்
இதேவேளை, கர்ப்பிணித்தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குறைந்த நிறைகொண்ட பிள்ளைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திரிபோஷ வேலைத்திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை.
திரிபோஷ உற்பத்தியின் மூலப்பொருட்களான சோளம் மற்றும் சோயா என்பனவற்றின் தட்டுப்பாடு காரணமாக திரிபோஷ வேலைத்திட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மாதாந்தம் 750 கிராம் நிறைக்கொண்ட சுமார் 16 இலட்சம் திரிபோஷ பக்கட்டுக்கள் சுகாதார அமைச்சுக்கு தேவைப்படும் நிலையில், கடந்த சில மாதங்களாக திரிபோஷ தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இவற்றின் காரணமாக தேவையான போஷாக்கினை பெற முடியாத நிலை தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்பட்டுள்ளது.