மன்னாரில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஒரே நாளில் 25 பேர் புதிதாக அடையாளம்
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 25 கோவிட்-19 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் இது வரை 260 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 25 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 24 நபர்கள் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும், மேலும் ஒருவர் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாந்தை மேற்கில் அடையாளம் காணப்பட்ட 24 நபர்களில் கடந்த வாரம் தொற்றுடன் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் அடையாளம் காணப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் வலைப்பாட்டுப் பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர்கள், மேலும் சாவகச்சேரி பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
அத்துடன் மடுவில் அரச அலுவலகம் ஒன்றில் கடமையாற்றுகின்ற உத்தியோகஸ்தர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர்களுடன் சேர்த்து மன்னார் மாவட்டத்தில் இது வரை 260 பேர் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் 243 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் உடலில் உள்ள வைரசின் அளவு மிகவும் கூடுதலாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதனால் இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் இலகுவாகத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலைமை பாரதூரமானது. எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளை உரியமுறையில் பின்பற்றிக் கொள்ள வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் இதுவரை 10,470 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாதம் 1842 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் வாரம் அளவில் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் பூர்த்தியாகும் நிலையிலுள்ளது.
முதல் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 30 தொடக்கம் 60 வயதிற்கும் இடைப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 44 நிமிடங்கள் முன்

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
