இலங்கையில் வேகமாகப் பரவும் இன்புளுவென்சா B வைரஸ் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாடு முழுவதும் இன்புளுவென்சா B வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், இது குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வைரஸ் நோய் விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா கேட்டுக்கொண்டுள்ளார்.
தொற்றுநோய் விஞ்ஞாபனப் பிரிவின் தரவுகளுக்கமைய, கடந்த ஏப்ரல் மாதத்தில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 17 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இந்த அளவு 24 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 20 பிரதான வைத்தியசாலைகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம், காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் மாதிரிகளைப் பரிசோதித்ததில் இந்த அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இன்புளுவென்சா வைரஸ்
பருவமழை தீவிரமடையும் காலங்களான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும், டிசம்பர் முதல் பெப்ரவரி வரையிலும் இன்புளுவென்சா வைரஸ் பரவுவது இயல்பான ஒன்று என வைத்தியர் ஜூட் ஜயமஹ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நோய் வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டிருந்தாலும், பொதுவாக இரண்டு அல்லது மூன்று நாட்களில் தானாகவே குணமடையக்கூடியது.
எனினும், பரவலைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். இருமல் அல்லது தும்மலின் போது கைக்குட்டை அல்லது முழங்கையைப் பயன்படுத்தி வாய் மற்றும் மூக்கைப் பாதுகாப்பாக மூடிக்கொள்ளுதல் அவசியமாகும்.
வைத்திய ஆலோசனை
கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், நாள்பட்ட நோயாளிகள் மற்றும் முதியவர்கள் இந்தத் தொற்று குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், அது நிமோனியா நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளதால் தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும்.

வைத்திய ஆலோசனையின்றி சுயமாக வலி நிவாரணிகளை உட்கொள்வது, நிமோனியா அல்லது உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பாரதூரமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என வைத்தியர் எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் வெசாக் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் இந்த வைரஸ் இலகுவாகப் பரவக்கூடும். எனவே, பொது இடங்களுக்குச் செல்லும்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்” வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா மேலும் தெரிவித்துள்ளார்.