யாழில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு..!
யாழில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை கவலை தரும் விடயமாக காணப்படுகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினர்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (25.11.2026) இடம்பெற்ற சிறுவர் மகளிர் தொடர்பான துறைசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பில் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் கடந்த ஆறு மாதத்தில் 163 பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகி உள்ள நிலையில் 133 பேரை அதிகாரிகள் மீள இணைத்துள்ளார்கள்.
30 மாணவர்கள் கைவிடப்பட்ட நிலையில் அவர்களை எவ்வாறு மீள இணைப்பது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.
அதேவேளை யாழ். மாவட்டத்தில் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 193 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான செயற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.
சிறுவர் - பெண்கள் பாதுகாப்பு
யாழ். மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் சிறுவர் பெண்கள் பிரிவு அமைக்கப்பட்டு அதற்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் உள்ளார்கள். அது மட்டுமல்லாது சிறுவர் பெண்கள் பாதுகாப்புக்காக தேசிய மட்டத்தில் அவசர தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கும் போதைப் பொருட்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆகவே அனைத்து தரப்பினர்களும் ஒன்றாக பயணிப்பதன் மூலம் எதிர்கால சவால்களை வெற்றி கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.