2025இல் இலங்கை பொலிஸ் வரலாற்றில் தொடப்பட்ட உச்சம் - பொலிஸ் மா அதிபரின் தகவல்
2025ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களின் அளவானது இலங்கை பொலிஸ் வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த மட்டம் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டில் இலங்கை பொலிஸாரின் ஒட்டுமொத்த செயற்திறனை 50 வீதத்திலிருந்து 60 வீதம் வரை அதிகரிக்க முடிந்தது.
சுற்றிவளைப்புகள்
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் ஆயுதச் சோதனைகள் இரண்டு மடங்காகவும், போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளது. இது இலங்கை பொலிஸ் வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த மட்டம்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும், தொடர்ச்சியான கண்காணிப்பு, உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் செய்யும் பணிகளை சரியாக மதிப்பீடு செய்தமை காரணமாக பொலிஸ் சேவையின் செயற்திறனை உயர் மட்டத்தில் பேண முடிந்தது.

குற்றப் புலனாய்வு நடவடிக்கை
அத்துடன், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான சட்ட அமுலாக்கம் மற்றும் ஏனைய குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளும் 60 வீதம் வரை வளர்ச்சியடைந்துள்ளன.
அமைச்சரின் நேரடித் தலையீட்டின் மூலம் நீண்டகாலமாக நிலவிய உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து 4500 க்கும் மேற்பட்ட பதவி உயர்வுகளை வழங்க முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |