கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து டக்ளஸுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை!
இலங்கையில் இழுவை மடி முறையில் இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய இழுவைப் படகுகளால் இலங்கையை அண்டியுள்ள கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கடற்றொழில் நடவடிக்கை காரணமாக இலங்கையின் கடல் வளங்களுக்குக் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இலங்கை கடற்பிரதேசத்தில் இழுவை வலைத்தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடை விதிக்கப்பட்டதனால் கற்பிட்டி, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் சிறிய அளவில் இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டக்ளஸ் ஆலோசனை
இது தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் திணைக்களம் மற்றும் நாரா நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில், தயாரிக்கப்பட்ட அறிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கையில் ஏற்றுமதிக்கு உகந்த இறால்கள் கல்பிட்டி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட கடற்பகுதிகளில் காணப்படுவதாகவும் அந்த பகுதிகளில் சிறிய அளவிலான இழு மடி படகுகளைப் பயன்படுத்தி நீண்ட காலமாக இறால் பிடிக்கும் தொழில் இடம்பெற்று வருவதாகவும் அதனால் கடல் வளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் பாதிப்பு
குறிப்பாக இந்தியப் படகுகளால் ஏற்படுத்தப்படும் அழிவுகளைப் போன்ற பாதிப்புக்கள் ஏற்படாதெனவும் அவ்வாறு இறால்கள் பிடிக்கப்படா விட்டால் இறால்களின் பெருக்கம் தடைபட்டு அவற்றை உணவாக உட்கொள்ளும் பட்சிகளின் பெருக்கம் அதிகரித்து இறால்கள் முற்றாக அழிந்துவிடுமெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்த பகுதியில் இறால் பிடிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், இழுவை மடி முறையில் இறால் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த பிரதேசங்களில் இழுவை மடி முறையில் இறால் பிடிப்பதற்கு அனுமதி
வழங்கும் சட்டங்களை வகுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை
வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
