2.5 மில்லியன் டொலர் மோசடி குறித்து வெளியான அறிக்கை
2.5 மில்லியன் டொலர் மோசடி குறித்து பொது நிதியியல் குழுவினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகள் மற்றும் நிலுவைகளை உறுதிப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே நிலவும் ஒருங்கிணைப்பு மற்றும் சீரான தன்மை இன்மையே இந்த 2.5 டொலர் காணாமல் போனமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், பொதுக் கடன் மேலாண்மைச் சட்டத்தின் பிரகாரம் கடன் சேவைகள் மற்றும் அது தொடர்பான அறிக்கையிடல் பணிகள் அனைத்தும் முழுமையாக 'பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்திடம்' ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் (ERD) இன்னும் இப்பணிகளில் முக்கிய பங்கு வகித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இலங்கை மத்திய வங்கி தனது பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, 2026 ஜனவரி மாதம் வரை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம், பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்தின் பணிகளுக்கு ஆதரவளித்து வந்ததுடன், நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு மேலாளர் என்ற ரீதியில், மத்திய வங்கியிடம் உள்ள திறைசேரியின் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை அவர்கள் உன்னிப்பாகக் கவனித்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நிதி அமைச்சகம் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, 2026 மே மாத இறுதிக்குள் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தரவு கசிவுகள் மற்றும் பணப் பரிமாற்றச் சிக்கல்களைத் தடுக்க நிதி அமைச்சு அவசரகால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது நிதியியல் குழு அறிவுறுத்தியுள்ளது.