கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்
மாவீரர் நாளுக்கான இறுதிநாள் நிகழ்வுகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் கோப்பாய் பகுதியில் மாவீரர் நினைவாலயம் இன்றைய தினம் (26.11.2026) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் துயிலுமில்லங்கள் இராணுவத்தினரால் இடித்து அகற்றப்பட்ட நிலையில் வித்துடல்கள் விதைக்கப்பட்ட கல்லறையின் கல்வெட்டுக்களை நினைவாக பேணி, நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மாவீரர் நாள் நாளைய தினம் 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கப்பட்டு, 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றல் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி - தீபன்
இரண்டாம் இணைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை பகுதியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு மற்றும் பல்வேறு மாபெரும் உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (25.11.2026) காலை 11 மணியளவில் முகமாலை இளந்தென்றல் முன்பள்ளியில் சிறப்பாக இடம்பெற்றது.
அண்மையில் முகமாலைப் பகுதியைப் புனித பூமியாகப் பிரகடனப்படுத்தியதன் நோக்கத்துடன், வன்னி இளையோர் அமைப்பின் 12ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு உட்பட்ட 25 முன்பள்ளிகளுக்கு போசாக்குமிக்க உணவுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், முன்பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான உதவித் திட்டங்களும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோரைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மாவீரர் பெற்றோருக்குப் பரிசில்கள், ஆடைகள் மற்றும் மதிய உணவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை, குறித்த நிகழ்வை அரச புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்ததாகவும், நிகழ்வில் கலந்துகொள்ளவிருந்த சில விருந்தினர்கள் அங்கு செல்வதற்கு மறுப்புத் தெரிவித்த சம்பவங்களும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
வன்னி இளையோர் அமைப்பின் 12ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில், முன்பள்ளிகளுக்கான உதவிகளைத் தமிழ் பேரவை மலேசியாவும், ஏனைய உதவித் திட்டங்களைத் தமிழர்களுக்கான உதவும் அமைப்பும் வழங்கியிருந்தன.
சமூக நலன், கல்வி மேம்பாடு, மாவீரர் பெற்றோரைக் கௌரவித்தல் மற்றும் வாழ்வாதார உதவிகளை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - பூ.லின்ரன்
முதலாம் இணைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் நெல்லியடியில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம் நேற்று (25.11.2026) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொதுச் சுடரினை லெப்டினன்ட் கேணல் அருணா, கப்டன் லீமா, லெப்டினன்ட் சக்தி ஆகிய மூவரின் தந்தையான இராசேந்திரம் ஏற்றி வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம், பொதுச் செயலாளர் சுமந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய மக்கள்
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தினர்.
நினைவாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பொதுமக்கள் பார்வையிட்டதுடன், மாவீரர்களின் உருவப்படங்களை வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


