வவுனியாவில் மடிச்சுக்கட்டி நோய் தாக்கம்: 782 ஏக்கர் நெற் செய்கை பாதிப்பு(Photos)
வவுனியா மாவட்டத்தில் மடிச்சுக்கட்டி நோய் தாக்கம் காரணமாக 782 ஏக்கர் நெற் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையின் நெல் மற்றும் பயிர் பாதுகாப்பு பாடவிதான உத்தியோகத்தர் கு.கஐரூபன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று (22.12.2022) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நெற்செய்கையில் பாதிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், நெற் செய்கை மாவட்டங்களில் வவுனியா மாவட்டமும் முன்னிலை வகிக்கின்றது. இம்முறை கால போகத்தில் 23 ஆயிரத்து 186 ஹெக்ரெயர் நெற் செய்கை எதிர்பார்க்கப்பட்ட போதும் ஆரம்பத்தில் போதியளவு மழை கிடைக்காமையால் 21 ஆயிரத்து 832 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறைவான மழை வீழச்சி கிடைத்ததுடன், தற்போது அதிகளவிலான மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றது.
வானிலை மாற்றத்தினால் குறைந்தளவிலான பகற்காலம், இருளான அதிக ஈரப்பதன் காலநிலை நிலவி வருவதால் நெற்செய்கை பயிர்களுக்கு இலை மடிச்சுக்கட்டி நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விசாயிகள் பலர் பாதிப்படைந்துள்ளனர்.
விவசாயிகள் கவலை
வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம், பாவற்குளம், பம்பைமடு, மடுகந்தை, மகாகச்சகொடி, நெடுங்கேணி, கனகராயன்குளம், ஓமந்தை உள்ளிட்ட பகுதிகளில் 782 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
இது 25 - 30 வீதமான தாக்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் பொருத்தமான கிருமி நாசினிகளை பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.”என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிகரித்த உழவு கூலி, களை நாசினி மற்றும் கிருமிநாசினி என்பவற்றின்
அதிகரித்த விலை என பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நெற் செய்கையில்
ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது மடிச்சுக்கட்டி நோய் தாக்கத்தால் தாம் மேலும்
பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.