புதிய அரசமைப்பு வரைவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் அடுத்த மாதம் வெளிவரும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், எதிர்வரும் ஜூன் மாதத்துக்குப் பின்னரே அது வெளிவரும் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
புதிய அரசமைப்புக்கான யோசனைகள் அடங்கிய வரைவு நகலை முன்வைப்பதற்காக அரசால் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் 9 பேரடங்கிய நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.
குறித்த நிபுணர் குழு, அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் மின்னஞ்சல் மற்றும் பதிவுத்தபால் மூலம் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டது.
பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்திருந்தனர்.தற்போது அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் அந்தக்கட்சிகளின் பிரதிநிதிகளுடன், நிபுணர்கள் குழு கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.
மேலதிக விளக்கங்களைப் பெறுவதுடன், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றது.இந்தக் குழு முக்கியமான சில சிவில் அமைப்புகளையும் நிபுணர்கள் குழுக்களையும் சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அத்தகைய சந்திப்புக்கள் எல்லாம் நிறைவடைந்த பின்னரே நிபுணர்கள் குழுவால், புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் முன்வைக்கப்படும் என்று அறியமுடிகின்றது.
நிபுணர்கள் குழுவுக்கு ஆறு மாத காலமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கால எல்லை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கப்படலாம் எனவும், ஜூன் மாதமளவிலேயே ஆரம்ப வரைவு நகல் கையளிக்கப்படும் எனவும் அறியமுடிகின்றது.
அதேவேளை, டிசம்பர் மாதத்துக்குள் புதிய அரசமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசு உத்தேசித்துள்ளது.



