மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நான் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறேன் - இம்ரான் மகரூப் எம்.பி
கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
நேற்று(27.07.2026) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கிண்ணியா தள வைத்தியசாலை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலையில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேசம் மட்டுமன்றி, அதனைச் சூழவுள்ள பல கிராமங்களின் மக்களும் தங்களது அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக கிண்ணியா தள வைத்தியசாலையையே நம்பியுள்ளனர்.
எனவே, இந்த வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதன் தரத்தையும் சேவைகளையும் மேம்படுத்த வேண்டும் என்பது நீண்டகாலமாக மக்களால் முன்வைக்கப்பட்டு வரும் நியாயமான கோரிக்கையாகும்.

இந்த மக்களின் கோரிக்கையை நான் ஒரு அரசியல் கோஷமாக அல்லாது, மக்களின் அடிப்படை உரிமையாகக் கருதி பல வருடங்களாக தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றேன்.
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உரைகளிலும், நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணைகளின் போதும், திருகோணமலை மாவட்ட மக்களின் சார்பில் பலமுறை இந்தக் கோரிக்கையை முன்வைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
தொடர் முயற்சி
அதேபோன்று, ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களை பலமுறை நேரில் சந்தித்து இந்த விடயத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளேன்.
இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் நிர்வாகச் சவால்கள் காரணமாக இந்த முயற்சி எதிர்பார்த்த வேகத்தில் முன்னேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இருந்தபோதிலும், மக்களின் நலனுக்கான இந்தக் கோரிக்கை கைவிடப்படாமல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நான் செயல்பட்டு வந்துள்ளேன்.
அதன் ஒரு முக்கிய அங்கமாக, 2025 டிசம்பர் 15 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்தேன் என குறிபப்பிட்டுள்ளார்.