பாடசாலை மாணவர்களுக்கு Trending சிகை அலங்காரம்! கடும் அதிருப்தியில் பெற்றோர்கள்
கந்தளாய் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் சில சிகை அலங்கார நிலையங்களில், பாடசாலை மாணவர்களுக்கு முறையற்ற விதத்தில் முடி வெட்டப்படுவதால், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக கந்தளாய் நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சில சிகை அலங்கார நிலையங்களில், மாணவர்களின் விருப்பத்திற்கிணங்கவோ அல்லது சிகை அலங்கார நிபுணர்களின் தன்னிச்சையான முடிவின் பேரிலோ, பல்வேறு நவீன (Trending) பாணிகளில் முடி வெட்டப்படுகின்றது.
இவ்வாறு செய்யப்பட்ட சிகை அலங்காரங்கள் பாடசாலை ஒழுக்க விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதால், மாணவர்கள் பாடசாலைகளில் அதிபர்களாலும் ஆசிரியர்களாலும் கடும் எச்சரிக்கைக்கு உள்ளாகின்றனர்.
விடுக்கப்படும் எச்சரிக்கைகள்..
சில சந்தர்ப்பங்களில், மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன என்றும், அவர்கள் கல்வியை விட நாகரீகத்தில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், முறையற்ற வகையில் முடி வெட்டப்பட்ட மாணவர்களை மீண்டும் சிகை அலங்கார நிலையங்களுக்கு அழைத்துச் சென்று, பாடசாலை விதிமுறைகளுக்கு ஏற்ப திருத்த முயற்சிக்கும் போது, அதற்காக மறுபடியும் முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பெற்றோர்கள் அதிருப்தி
தற்போதைய பொருளாதார சூழலில், ஒரே சேவைக்காக இருமுறை செலவு செய்ய வேண்டிய நிலை, சாதாரண குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

எனவே, சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள், தங்களை நாடி வருபவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு பொருத்தமான மற்றும் ஒழுக்க விதிமுறைகளுக்கு இணங்கும் முறையில் முடி வெட்டுவதை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், இந்த விடயத்தில் பிரதேச செயலகம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, சிகை அலங்கார நிலையங்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும், மாணவர்களின் ஒழுக்கத்தையும் பெற்றோரின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.