முறையற்ற விதத்தில் விவசாயிகளிடம் நிதி சேகரிப்பு விடயம் அம்பலம்
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து அமைப்பொன்றினால் பெருந்தொகையான நிதி முறையற்ற விதத்தில் அறவிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தில் கீழான கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினால் மாவட்ட பயிர்செய்கை குழுவின் எந்தவித தீர்மானங்களோ அல்லது அனுமதிகளோ இன்றியே இவ்வாறு முறையற்ற விதத்தில் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் கட்டாயத்தின் பேரில் ரூபா 100 முதல் 500 ரூபா வரையில் பெருந்தொகை நிதியை அறவிட்டுள்ளனர்.
நிதி அறவீடு
பற்றுச் சீட்டுக்கள் மூலம் இந்த நிதியானது அறவிடப்பட்டாலும் கடந்த ஏப்ரல் மாதம் 08ம் திகதி மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற இரணைமடுக்குளத்தின் கீழான பயிர்செய்கை குழுக்கூட்டத்திலேயே அதிகளவில் பெறப்பட்டுள்ளது.
பயிர்செய்கை நாட்காட்டி, வாய்க்கால் பராமரி்ப்பு கமவிதானை வேதனம், கால்நடை பிடி கூலி, பராமரிப்பு கூலி, நீர் விரயமாதலுக்கான தண்டம் என்ற அடிப்படைகளில் பெருந்தொகையான நிதிகளை கமக்கார அமைப்புக்களின் ஊடாக சம்மேளனம் என்ற அமைப்பு ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் அறவீடு செய்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி, எரிபொருள் பற்றாக்குறை, இரசாயன உரம் கிருமிநாசினிகள், களை நாசினிகள் என்பன கிடைக்கப்படாத நிலையிலும் விவசாயிகள் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயிர்செய்கைகளை முன்னெடுக்கின்றனர்.
இந்த நிலையில் முறையற்ற விதத்தில் எந்தவித தீர்மானங்களுமின்றி இவ்வாறு பெருந்தொகை நிதி அறவிடப்பட்டுள்ளது.
முறைக்கேடாக அறவிடப்படும் நிதியானது வருடாந்த ஒன்று கூடல்களிலும் மற்றும் இடமாற்றம் பெற்றுச்செல்லும் அதிகாரிகளுக்கான பிரிவுபசார நிகழ்வுகளிலும் பெருமளவில் செலவிடப்பட்டுள்ளன.
விவசாயிகள் வலியுறுத்தல்
கடந்த மார்ச் மாதத்தில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பெரும் பஞ்சத்தில் மூழ்கியிடுந்த நிலையில் பல இலட்சம் ரூபா செலவிடப்பட்டு பிரம்மாண்டமான பிரியாவிடை நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
முறையற்ற விதத்தில் பெற்ற நிதிகளை பயன்படுத்தியே கோவிந்தன் கடைச்சந்தியில் அமைந்துள்ள திட்ட அலுவலகத்தில் அந்த நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினுடைய இணை தலைவர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினுடைய மேலதிக இணையப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபர், துறைசார் திணைக்கள அதிகாரிகள் ஏன் கண்மூடி மௌனமாக இருக்கின்றார்கள்? என மக்கள் கேள்வியை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.