கொழும்பில் முதலாம் திகதி முதல் புதிய நடைமுறை : அபராதம் விதிக்க நடவடிக்கை
கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை மீறிய 675 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
விதிமுறைகளை மீறியமை தொடர்பில் CCTV கண்காணிப்பு அமைப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் கொழும்பு நகரில் CCTV மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
போக்குவரத்து விதிகள்
கடந்த 22ஆம் திகதி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களை கண்டுபிடிப்பதற்காக, பொலிஸாரால் செயல்படுத்தப்படும் புதிய CCTV கண்காணிப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் 108 CCTV கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
தொலைதூரத்தில் இருந்து கொழும்புக்கு வரும் சாரதிகள் போக்குவரத்து விதிகளை மீறி பிடிபட்டால் அது தொடர்பான அபராத சீட்டு அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொலிஸார் மூலம் வழங்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.