அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தகுதிபெறும் அனைவருக்கும் எவ்வித தடங்கலும் இன்றி அஸ்வெசும பலன்கள் கிடைக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும முதற்கட்டத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத குடும்பங்களுக்கும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தும் வீட்டுத் தகவல் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத எந்தவொரு நபர்களும் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பம்
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (15) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற போதே நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் 24 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.முடிந்தவரை உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம் நன்மைகளை வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த முடியும்.
விண்ணப்பிக்கையில் கட்டாயம் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். தேசிய அடையாள அட்டைகள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம், ஆட்பதிவுத் திணைக்களத்தினால் பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அஸ்வெசுமவின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பத்தை ஒன்லைன் முறையிலும் கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலகத்தின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் www.wbb.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய முடியும்.
இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கான மாதிரி விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்கள் அல்லது சிவில் அமைப்புகளின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப்படிவங்களை எக்காரணம் கொண்டும் பணம் செலுத்தி வாங்க வேண்டிய அவசியம் கிடையாது.
முதற்கட்டமாக விண்ணப்பித்து அஸ்வெசும நன்மைகளைப் பெறத் தகுதி பெறாதவர்களும், மேல்முறையீட்டு விசாரணையில் பங்கேற்காதவர்களும் தங்களின் தகவல்களை மீள் சான்றுபடுத்த வாய்ப்பு வழங்கப்படும் அஸ்வெசும தொடர்பான மேலதிக தகவல்களை, 1924 எனும் அவசர எண்ணின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
நலன்புரி நன்மைகள் சபையின் உறுப்பினர்களான எச். டி. கே பத்மசிறி, குமார் துனுசிங்க, கே. எச். ஜே முலர், ஆர். அனீஸ், மேலதிக ஆணையாளர் (செயல்பாடுகள்) ஆர். ஆர்.ஆர் ராஜபக்ஷ, மேலதிக ஆணையாளர் (நிதி) ஈ. ஏ.வீரசேன ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |