பிரித்தானியா வரும் பயணிகளுக்கான முக்கிய தகவல்! - அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
பிரித்தானியாவில் தனிமைப்படுத்தலுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களில் பயணிகள் தங்குவதற்கு 1,750 பவுண்ட்ஸ் அறவிடப்படும் என சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் அறிவித்துள்ளார்.
திங்களன்று நடைமுறைக்கு வரும் இந்த நடவடிக்கைகள், சிவப்பு பட்டியலிடப்பட்டுள்ள 33 நாடுகளில் இருந்து திரும்பும் இங்கிலாந்து மற்றும் ஐரிஷ் குடியிருப்பாளர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஹோட்டலில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தத் தவறியவர்களுக்கு 10,000 பவுண்ட்ஸ் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இதற்கிடையில், விமானம் மூலம் வெளிநாட்டிலிருந்து ஸ்காட்லாந்திற்கு வரும் அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திலும் புதிய, கடுமையான பயண நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுகாதார செயலாளர்,
இந்த திட்டத்திற்காக 16 ஹோட்டல்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன, 4,600 அறைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவிற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் ஒரு புதிய மேம்பட்ட சோதனை திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படும்.
தனிமைப்படுத்தப்பட்ட செயல்பாட்டின் போது இரண்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
வீட்டிலோ அல்லது ஒரு ஹோட்டலிலோ தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களின் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் இரண்டு மற்றும் எட்டுவது நாட்களில் ஒரு சோதனையை செய்துகொள்ளவேண்டும்.
இந்த விதிகளை மீறுபவர்கள் நம் அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள் என்று சுகாதார செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,364 பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 39,72,148 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், கோவிட் - 19 தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,052 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 850 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட் - 19 பாதிப்பில் இருந்து 19,50,886 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால தற்போது 19,07,412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.