சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இருந்து காணாமல் போன முக்கியமான ஆவணங்கள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைமையகத்தில் இருந்து பல முக்கியமான ஆவணக் கோப்புகள் காணாமல் போயுள்ளதாகக் கூறி கொழும்பு - மருதானை (Colombo) பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடானது கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவினால் அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva), எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடத்தை கூட்டுமாறு கட்சியின் பதில் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவின் பின்னணியில், கட்சியின் எதிர்கால முயற்சிகள் தொடர்பாக, குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக சிறிசேன செயற்படுவதைத் தடுத்து, ஏப்ரல் 18ஆம் திகதி வரை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைக்க விரும்புவதாக சிறிசேன பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |