பருத்திதுறை நகரசபை அமர்வில் வழங்கப்பட்ட முக்கிய அனுமதிகள்
பருத்திதுறை நகரசபை அமர்வு தவிசாளர் வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று(27.07.2026) பிற்பகல் 2 மணியளவில் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெற்றுள்ளது.
இதில் முதல் நிகழ்வாக கடந்த கூட்ட அறிக்கை ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நிதி குழு கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களுக்கான சபை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட அனுமதிகள்
மேலும் இலங்கை போக்குவரத்துச் சபையின் நேர கணிப்பாளருக்கான நவீன சந்தை தொகுதியில் இடவசதி வழங்குவதற்கான சபை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிவாரியாக ஒப்பந்த ஆட்களை பதிவு செய்வதற்கான சபை அனுமதி, பருத்தித்துறை மீன் சந்தையில் உள்ள கூலர் கேள்வி கோரலுக்கான சபை அனுமதி மற்றும் சபை எல்லைக்குள் கழிவு நீர் வாய்க்காலுக்குள் கழிவுநீர் தவிர்ந்த ஏனைய கழிவுகளை அகற்றுபவர்களுக்கு தண்டம் விதிப்பதற்கான அறிவித்தலுக்கான சபை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

வீதியோரங்களில் வெட்டப்டுகின்ற மரங்கள் அகற்றப்படாமல் பிரதேச சபை அவற்றை அகற்றுவதாகவும் அதற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபை, இலங்கை தொலைத் தொடர்பு நிறுவனம் ஆகியவற்றிடம் அறவீடு செய்வதற்கான சபை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது வீதி விளக்குகளை திருத்துவதற்கான நிதிக்கான அனுமதியும், Chopper மெஷின் கொள்வனவு செய்வதற்கான மேல் அதிக நிதிக்கான சபை அனுமதியும், தும்பளை - கிழக்கு பகுதியில் மலசலகூட அமைப்பில் பற்றாக்குறைக்கான நிதியை வழங்குவதற்கான சபை அனுமதியும் சபையில் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 195 மீட்டர் பொது பாதையாக பதிவு செய்யப்பட்டுள்ள பாதையானது தற்போது 121. 5 மீட்டர் காணப்படுவது தொடர்பாக மிக நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளது.