மன்னார் மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்
மன்னார் மாவட்டத்தில் தற்போது 3 ஆவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார வழி முறைகளை தொடர்ச்சியாக கடை பிடித்து தீபாவளி மற்றும் அதனை தொடர்ந்து வருகின்ற கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலங்களில் சுகாதார வழிமுறைகள் மிக இறுக்கமாக கடைபிடித்தால் மட்டுமே மீண்டும் ஏற்படக்கூடிய கோவிட் தொற்று நிலமையை தவிர்த்துக் கொள்ள முடியும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன்கிழமை (3) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2) புதிதாக 22 நபர்கள் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 7 தொற்றாளர்கள் பண்டிவிரிச்சான் வைத்தியசாலையிலும்,5 தொற்றாளர்கள் நானாட்டான் வைத்தியசாலையிலும், 4 தொற்றாளர்கள் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் நாள் ஒன்றுக்கு 8 அல்லது 9 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக நாள் ஒன்றுக்கு 17 தொற்றாளர்கள் வீதம் குறித்த தொற்று அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
பயனத்தடைகளின் தளர்வும்,சுகாதார வழிமுறைகள் பின் பற்றுவதில் மக்கள் காட்டுகின்ற அசமந்த போக்கு ஆகிய காரணங்களால் மீண்டும் ஒரு தொற்று பரவும் நிலை மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் சுகாதார வழி முறைகளை தொடர்ச்சியாக கடைபிடிக்க வேண்டும்.
தீபாவளி மற்றும் அதனை தொடர்ந்து வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் சுகாதார வழிமுறைகள் மிக இறுக்கமாக கடைபிடித்தால் மட்டுமே மீண்டும் ஏற்படக்கூடிய தொற்று நிலமையை தவிர்த்துக் கொள்ள முடியும். இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர் மரணத்தின் பின்னர் கடந்த 51 தினங்களாக எவ்வித கோவிட் மரணங்களும் பதிவாகவில்லை.
தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 23 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. பொது மக்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஓரளவிற்கு முடிவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் 86 சதவீதத்தினர் முதலாவது தடுப்பூசியும், 74 சதவீதத்தினர் 2 ஆவது தடுப்பூசியும் பெற்றுள்ளனர். பாடசாலைகளில் மொத்தமாக இதுவரை 4882 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை செல்லும் வயதையுடைய ஆனால் பாடசாலை செல்லாத 531 பேருக்கு தடுப்பூசிகள்
செலுத்தப்பட்டுள்ளது.நேற்று செவ்வாய்க்கிழமை (2) முதல் சுகாதார பணியாளர்கள்
மற்றும் பொலிஸாருக்கான மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 111 பேருக்கு 3 ஆவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 3 ஆவது
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.