இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் சாத்தியம்
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருட்களை இறக்குமதி செய்யும் போது அவை உற்பத்தி செய்யப்பட்ட நாடுகளில் செலுத்தப்படும் கொள்கலன் கையாளுகை கட்டணங்களை உள்ளுர் இறக்குமதியாளர்கள் செலுத்த நேரிட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் மே மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிலோ ஒன்றுக்கு 4 அல்லது 5 ரூபாவினால் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியாளர்களுக்கும் நெருக்கடி
கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்த கையாளுகை கட்டணங்கள் உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் அறவீடு செய்யப்பட்டு வந்தது.
எனினும், தற்போதைய துறைமுகங்கள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த நடைமுறையை மாற்றியிருந்தார்.
இதனால் இறக்குமதியாளர்கள் மட்டுமன்றி ஏற்றுமதியாளர்களும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் அண்மையில் சந்திப்பு ஒன்றை நடாத்த இறக்குமதியாளர்கள் முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.